Sunday, March 20, 2011

ஏணியும் எஸ்கலேட்டரும்

ஏற்றி விடும் ஏணியாக நானில்லை
நானும் ஏறிக் கொண்டு
ஏற்றி விட்டுக் கொண்டு இருக்கிறேன்
என எண்ணியிருந்தேன்...
நான் எஸ்கலேட்டர் என்பது புரியும் வரை...

சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால்


சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால்
சந்திரனுக்கு என்ன நஷ்டம்?
அன்று பள்ளிப் பராயத்தில் அன்னை போதித்தாள்.
எனக்கும் அது சரி என்றே தோன்றியது.

வளர்ந்த பின்பு ஒரு சந்தர்ப்பத்தில்
நாய் ஏன் சந்திரனைப் பார்த்துக் குரைக்க வேண்டும்?
சந்திரனுக்கும் நாய்க்கும் ஏதோ பிரச்சனை...
சந்திரன் அப்படி சந்திரன் இப்படி.......

சுற்றி இருக்கும் மனிதர்களே
நாய்களாகிக் குரைப்பதைத்
தவிர்க்கவே விரும்புகிறேன்.
என்ன செய்வது முடியவில்லை.

அவசியமற்ற அர்த்தமற்ற பேச்சுக்கள்
ஒதுக்கத்தான் வேண்டுமென
புத்தி சொல்கிறது
மனது மருகுகின்றது

சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால்
சந்திரனுக்கும் நட்டம் இருக்கத்தான் செய்கிறது.

அன்புள்ள மனைவிக்கு - படித்ததில் பிடித்த ஒரு கவிதை

இது சில வருடங்களுக்கு முன் குமுதத்தில் வந்த கவிதை. வாசிக்க மிகப் பிடித்ததால் பத்திரப் படுத்தினேன். ஆனால் எழுதியவர் பெயர் தெரியவில்லை. உங்களில் யாராவதாகக் கூட இருக்கலாம்.

அன்புள்ள மனைவிக்கு

ஆண்டுகள் போனாலென்ன
வாண்டுகள் ஆனாலென்ன

முடியாது காதல் ஓட்டம்
விடியாது இரவின் நீட்டம்

வாழ்க்கையில் யுத்தம் உண்டு
முடிந்தபின் முத்தம் உண்டு

முத்தங்கள் அலுக்கும் போது - மீண்டும்
யுத்தத்தின் சத்தம் உண்டு

சண்டைகள் இல்லாக் காதல்
சவ சவ காதல் - நெஞ்சில்
எரிச்சலை வைத்துக் கொண்டு
சிரிப்பது போலிக் காதல்

கோபமோ பொங்கி நிற்கும்
தாபமோ ஒளித்தல் இன்றி

வெளிப்படும் உணர்வே காதல் - அங்கே
சண்டையும் காதல் ஆகும்

வாழ்க்கையே போதும் என்று
வெறுக்கின்ற நேரம் உண்டு
வெறுப்பினைத் தூண்டும் நீதான்
வாழவும் தூண்டுகிறாய்.

வாழ்க்கையில் வரமாய் வந்தாய்
சில நேரம் சாபம் தந்தாய்
வரத்தினை நினைத்துக் கொண்டு
சாபத்தை மறக்கக் கற்றேன்

கூட்டலும் உண்டு; வாழ்வில்
கழித்தலும் உண்டு; கூட்டிக்
கழிக்கின்ற போது கொஞ்சம்
மிச்சமாய் இன்பம் உண்டு

நிம்மதி தேடும் நெஞ்சம்

தவிப்பினில் நீச்சல் போடும்
நித்திரை இல்லாத கண்கள்
ஓ வென்று கூச்சல் போடும்

அனைத்தையும் வெல்வதற்கு உன்
அருகாமை ஒன்று போதும்; உன்
சேலையின் முனையில் வாழ்வின்
சோர்வினைப் போக்கிக் கொள்வேன்

அம்மா - நேரில் நின்று பேசும் தெய்வமாக வேண்டாம். அம்மாவாகவே.........


கொண்டவர்க்கு எது பிடிக்கும்; குழந்தைகள் எதை விரும்பும்
தண்டூன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்கதென்ன
உண்பதில் எவருடம்புக்கெது உதவாது என்றெல்லாம்
கண்டனள் கறிகள் தோறும் உண்பர் தம்மைக் கண்டாள்.


பொரியலோ பூனைக்கண் போல் பொலிந்திடும் சுவை மணக்கும்
அருந்துமா சிறிய பிள்ளை என என்னும் அவளின் நெஞ்சம்
இருந்தந்தச் சிறிய பிள்ளை இச் என்று சப்புக்கொட்டி
அருந்தியே மகிழ்வதைப்போல் அவள் காதில் ஓசை கேட்கும்.


ஈழத்தில் பிந்திய 80 களில் 6 ம் 7 ம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் இருந்த பாடல் இது.
இதை ஆசிரியர் விளக்கிக் கற்பித்த அன்றே வீட்டில் வந்து அம்மாவைக் கவனித்தேன். நான்கு பிள்ளைகளுக்கும் நான்கு விதமாக முட்டை பொரித்தார். நான்கு விதமாகத் தோசை சுட்டார். இது பல குடும்பங்களிலும் தாய்/மனைவி செய்வது தான் என்றாலும் ஏனோ தானோ என்று சமைப்பவர்களும் செய்து முடித்தால் போதும் என்று செய்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
இப்போதும் வீடுகளில், (மேலை நாட்டினர் கூட) சமையல் பெரும்பாலும் பெண்களிடம் தான் இருக்கிறது. (நளபாகம் என்பதையோ வெளியில் restaurant இல் chef ஆக இருப்பவர்களைத் தவிர்த்து) ஆனால் இதற்குரிய அங்கீகாரத்தைப் பெரும் பெண்கள் எத்தனை பேர்? ஒருநாள் உப்பு கூடிவிட்டால் சலித்துக் கொள்பவர்களில் எத்தனை பேர் நன்றாக இருக்கும் நாட்களில் பாராட்டி இருப்பார்கள்?
இதைப் புரிந்து கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் இருப்பது துரதிர்ஷ்ட வசமானது. சிறு பிள்ளைகள் சரி. 10, 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளே புரியாமல் இருந்தால் அது வீட்டிலிருக்கும் மற்றவர்களின் தவறு தான்.
சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் வேலைக்குப் போகும் அம்மாக்களும் பிள்ளைக்கும் கலந்து கொண்ட நிகழ்வில் பல குறைகளையும் கூறினார்கள். அந்தப் பிள்ளைகளுக்கும் பல குறைகள் இருக்கும். நானும் அழகன் படத்தில் வருவது போல வேலைக்குப் போகாத அம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கலாமே என எண்ணியதுண்டு. துரதிர்ஷ்ட வசமாக எனது ஆறு வயதில் அப்பாவைப் பிரிந்த எனக்கு வேலையும் பார்த்து எங்களையும் "கைம்பெண் வளர்த்த கழுதைகள்" ஆகி விடக் கூடாது என்று கண்டிப்புடன் வளர்த்த அம்மா வில்லியாகவே தோன்றியதும் உண்டு. ஆனால் 13 வயதில் அவரையும் பிரிந்த பின்னரே அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது. அம்மாவை இழந்த போது காரணமே தெரியாமல் அழுத நான் இன்று வரை அழுதது, அழுவது அதிகம்.
அம்மாவென்றாலே தியாகிகள் என்று வைத்திருக்கும் மனப்பாங்கும் மாற வேண்டும்.
அப்படி இருப்பது அம்மாக்களின் இயல்பு.
ஆனால் அதைப் புரிந்து அனுசரணையாக இருப்பது
உறவுகளின் உன்னதம்.

இடம் மாறிய ஹீரோயிசம்

சாப்பாடு ரெடியா? பரபரப்பாய்க் காலுறை அணிந்தவாறு சத்தமிட்டார் வாசன். ஒவ்வொரு நாளும் நடக்கும் கூத்துத் தான்.
அப்பா, நானும்...........
கதவைத் திறந்து வாகனத்தை எடுக்கும் முன் குடுகுடுவென்று ஓடினாள் பூரணி, என் புத்திரி. சட்டென்று இறங்கி முழந்தாளிட்டு ஏதோ கதைத்து சமாதானப் படுத்திக் கொஞ்சி விட்டு புறப்பட்டு விட்டார்; அவர்கள் இருவருக்குமான பாஷை.

கதவைச் சாத்தி விட்டு வரும் போது தான் பார்த்தேன் எதிர் வீட்டு ஷனா ஏதோ கையை அசைத்துக் கூறினாள்; எனக்கு விளங்கவில்லை என்றவுடன் ஓடி வந்தாள்.
ஏன் அக்கா, உங்கள் ஹீரோ ரொமாண்டிக்கா எதுவும் சொல்லி மகளை கிஸ் பண்ணிய மாதிரி கிஸ் பண்ணி விட்டுப் போக மாட்டாரா? இவரெல்லாம் ஹீரோ இல்லை.கடுகடுவென்று போறார்?நீங்கள் லவ் பண்ணித்தானே கலியாணம் செய்தீங்கள்?
ஷனா புதிதாக காதல் கற்பனை என்று தொடங்கியிருப்பவள்;

தெரியவில்லை; லவ் பண்ணினோம்; ஆனா உன்னை மாதிரியெல்லாம் இல்லை.
அதென்ன எங்களை மாதிரி இல்லையென்றால் எப்படி? எவ்வளவு கால லவ்?
அடுக்கிக் கொண்டே போனாள்.
அவளிடம் சிரித்து சமாளித்து சொல்லத் தொடங்கிய எனக்கே சந்தேகம். எப்போதிருந்து???

சிறிய வயதிலே பக்கத்து வீடு. எனது அக்காவும் வாசனும் ஒரே வகுப்பு. அம்மா இப்போதும் சொல்லுவா. நான் முதல் வகுப்புக்குப் போன போது அக்காவின் கையைப் பிடித்துப் போவதை விட வாசனின் கையைப் பிடித்துத் தான் போவேனாம். ஆனாலும் நாங்கள் friends இல்லை. அக்காவும் அவரும் friends.


ஷனா சொன்னது போல அல்ல. ஒவ்வொருவருடைய ஹீரோயிசமும் வேறு மாதிரி. அதுவும் ஒவ்வொரு ஆணும் மற்றவர்களுக்கு எப்படியோ தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஹீரோ தான்.
வாசனும் அப்படித்தான். சிறிய வயதில் நன்றாகப் பழகி இருந்தாலும் ஐந்தாம் ஆறாம் வகுப்புக்கு நானும் அக்காவும் வந்ததுமே அப்பா அம்மாவின் கட்டுப்பாடு கூடியது. அதுவும் கிராமத்தில் இருந்ததால் நாங்கள் கதைப்பதில்லை.


எட்டாம் வகுப்பு; நான் டியூஷன் முடிந்து வரும் போது அப்போது தான் பழகிய மோட்டார் பைக்கில் ஒரு ரவுண்ட். எங்கள் அயலில் அந்த வயதில் முதலில் மோட்டர் சைக்கிள் ஒட்டியது வாசன் தான். எனக்கு ஹீரோவாகத் தான் தெரிந்தார்.


பத்தாம் வகுப்பு படிக்கும் போது அக்கா செய்யாத உதவியெல்லாம் அவள் மூலமாக வாசன் கொடுத்தது தான்.


அந்த வயதில் லவ் இல்லை. ஆனால் ஏதோ ஒரு interest இருந்தது. என்னைக் கவரும் விதமாக (ஹீரோத்தனம் எல்லாம்) வாசன் செய்வதை நான் ரசித்தேன். ஆனாலும் கதைப்பதோ கண் ஜாடை பரிமாறுவதோ கூட இல்லை. அப்பா, அம்மா, அக்காவுக்குக் கூட சந்தேகம். ஆனாலும் என்னில் நம்பிக்கை.


எல்லாமே வாசனால் தான். எங்கள் மகளிர் கல்லூரியில் ஏதாவது போட்டி என்றால் அதற்கெல்லாம் அவர் கல்லூரியில் இருந்து அவர் தான் பிரதிநிதி. என்ன செட்டப் செய்து வருவாரோ தெரியாது.

அக்காவும் வாசனும் ஒரே பல்கலைக் கழகத்துக்குத் தெரிவான பிறகு அவர்களது பழக்கம் அதிகரித்தது. எங்கள் ஊரில் அட்வான்ஸ் லெவல் வரைக்கும் தான் பெண் பிள்ளைகளைக் கண்காணிப்பார்கள். அதன் பிறகு கட்டுப்பாடுகள் குறைந்துவிடும்.

எனக்கு எந்த எண்ணமும் இல்லாவிட்டாலும் கொஞ்சம் பொறாமையாக இருந்த காலம் அது. அதுவும் நான் கொஞ்சம் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் அவர்கள் படித்த பல்கலைக்கழகத்துக்குத் தேர்வாகவில்லை. (நான் ஒன்றும் படிப்பில் குறைவு இல்லை; ஏதோ நான் படிப்பது எதுவும் எக்ஸாமில் வருவதில்லை)


எனக்குப் பல்கலைக்கழகத்தில் முதல் வருட எக்ஸாம் முடிந்து வீட்டிற்கு வந்து ஒரே கவலையில் இருந்தேன்- எனக்கு computer துறை கிடைக்கவில்லை என்று.
அப்போ வீட்டிற்கு வந்தபோது (அக்காவை பார்க்கத்தான்) அக்கா உள்ளே சென்றிருந்த போது நக்கலாக கூறினார்.


"எப்படியும் என்னுடைய வீட்டில் வந்து குப்பை கொட்டத்தானே போகிறாய். எந்த field ஆனால் என்ன; படி"


எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது. ஆனால் யாரிடமும் காட்டிக் கொடுக்கவில்லை.
(யாராவது முதல் முதலில் இப்படிக் காதலைச் சொல்வார்களா??? ஆனால் அப்போதும் இதைக் காதல் என்று என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.)

ஆனாலும் இந்த வார்த்தைகள் அடிக்கடி அடுத்த இரண்டு வருடமும் மனதில் வந்து வந்து போனது. இதற்கிடையில் ஒரு நாள் அக்கா தொலை பேசியில் கேட்டா. இங்கு கம்பஸில் எல்லாருக்கும் தனக்கு ஊரிலேயே ஒரு ஆள் இருப்பதாக சொல்கிறான். உனக்கு அப்படி ஏதாவது எண்ணம் இருக்கிறதா என்று. எனக்கே தெரியவில்லை. ஆனால் உனக்கென்ன பைத்தியமா என்று அக்காவைத் திட்டி விட்டேன்.


மூன்றாம் வருடத்தில் இருந்த போது அப்பாவைப் பிரிந்தேன். அதிலிருந்து எங்கள் வீட்டில் அவரது குடும்பத்திற்கே அக்கறை கூடியது. அக்காவின் கல்யாணத்திற்கு ஓடியாடி வேலை எல்லாம் செய்த போதும் எனக்கு ஹீரோவாகத்தான் தெரிந்தார். ஆனாலும் நாங்கள் லவ் பண்ணவில்லை.

ஷனா சிரிக்கத் தொடங்கினாள். இதெல்லாம் போர் லவ் ஸ்டோரி. வாசன் அண்ணா ஒன்றும் ஹீரோ இல்லை.

அவள் அம்மா கூப்பிட்டதும் ஷனா ஓடி விட்டாள்.

மாலை ஐந்து மணி. வந்ததும் வராததுமாக வாசன் மகளைத் தேடினார். அவள் எதிர் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்றதும் சாப்பாட்டைக் கூட வேண்டாம் என்று விட்டு screw driver மற்றும் "ஆயுதங்கள்" சகிதம் ஏதோ செய்யத் தொடங்கி விட்டார். அது வரை சாப்பிடாமல் காத்திருந்த எனக்கு கோபம் வந்து போய்ப் படுத்து விட்டேன்.

சற்று நேரத்தில் பூரணியின் பிஞ்சுக் கை என்னை எழுப்பியது. கண்ணெல்லாம் சந்தோஷம்.

அம்மா பாருங்கம்மா.........


நேற்று அப்பாவும் மகளுமாகச் செய்த கார் தரையில் ஓடிக்கொண்டிருந்தது. அவளிடம் ரிமோட்டில் இயங்கும் கார் பல இருந்தாலும் நேற்று தாங்கள் அட்டையில் செய்த கார் ஓடாதா என்று மகள் கேட்டதற்காக ஒரு சிறிய மோட்டார் வாங்கி வந்து அதை எப்படியோ ஓட வைத்து மகளுக்குக் காட்டத்தான் சாப்பாடும் தியாகம்.
மகளைத் தூக்கிக் கேட்டார் வாசன்


How is your dad??My best appa.......
அம்மா??அம்மா வேஸ்ட் அப்பா.


அவர் சொல்லிக் கொடுத்தது தான்.வாசன் கண்ணில் மீண்டும் ஹீரோயிசம்; ஆனால் என்ன கொடுமை சார் இது. அது இடம் மாறி இருந்தது மகளிடம்.